பிரபல ஹீரோ மீது செருப்பு வீச்சு ; கிச்சா சுதீப் கண்டனம்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தர்ஷன். சமீபத்தில் அவரது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பொது இடத்தில் கலந்துகொண்டபோது கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் தர்ஷன் மீது செருப்பை வீசியுள்ளார். இந்த நிகழ்வு கன்னட திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கும் தர்ஷனுக்கும் இடையே இருப்பதாக சொல்லப்படும் கருத்து வேறுபாடு காரணமாக, புனித் ராஜ்குமார் ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் கிச்சா சுதீப்பின் கண்டன அறிக்கையும் வெளியாகி உள்ளது.

இந்த அறிக்கையில் சுதீப் கூறும்போது, “கன்னட திரையுலகம் தற்போது மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாராட்டிப் பேசப்படும் அளவிற்கு மிகப்பெரிய இடத்தை தொட்டுள்ளது. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவம் கன்னடர்கள் என்றால் இப்படித்தான் என்கிற ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. அந்த தீர்வை ஏதோ ஒரு விதத்தில் நாம் பெற்றுக்கொள்ள முடியும். பொது இடத்தில் ஒருவரை அவமானப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று.

புனித் ராஜ்குமாருக்கும் தர்ஷனுக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நான் அவர்கள் இருவரையும் நன்கு அறிவேன். அவர்களுக்குள் எந்த விதமான பகையும் இருந்ததில்லை. அதை மனதில் வைத்துக்கொண்டு புனித் ரசிகர்கள் யாரோ இப்படி செய்துள்ளனர். இதுதான் நீங்கள் புனித் ராஜ்குமார் மீது காட்டும் மரியாதையா? அவர் இருந்திருந்தால் நீங்கள் இப்படி செய்திருப்பதை வரவேற்று இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அன்பையும் மரியாதையும் பரப்புவோம்.. மற்றவர்களிடமிருந்து நாமும் அதையே திரும்பப் பெறுவோம்” என்று கூறியுள்ளார் கிச்சா சுதீப்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.