குவஹாத்தி,
அசாம் மாநிலம், குவஹாத்தியில் ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றில், உமானந்தா கோவில் அமைந்துள்ள தீவை நோக்கி புலி ஒன்று நீந்திச் சென்றதால், அங்கிருந்த பக்தர்கள் பெரும் பீதியடைந்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தி நகரில் ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில், தேசிய புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்குள்ள புலி ஒன்று, ஆற்றில் தண்ணீர் குடித்த போது, தவறி விழுந்து இழுத்து செல்லப்பட்டது.
இருந்தும், இந்தப் புலி மிகுந்த தீரத்துடன் நீந்தத் துவங்கியது. இது, ஆற்றின் நடுவே உமானந்தா கோவில் அமைந்துள்ள தீவை நோக்கி நீந்தி வருவதை, அங்குள்ள பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு, பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனர்.
உடனே வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்து, ஆற்றில் நீந்தியபடி தத்தளித்த புலியை மீட்கும் பணியை துவக்கினர்.
நடு ஆற்றில், இரு பாறைகளுக்கு இடையில் சிக்கித் தவித்த புலியை பிடித்து, கூண்டில் அடைத்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பின், காப்பகத்தில் புலி விடப்பட்டது.
இந்த சம்பவத்தால், தீவில் இருந்த கோவில் கடைகள் அனைத்தும் புலியைப் பிடிக்கும் வரை மூடப்பட்டு இருந்தன. ஆற்றில் புலி நீந்தும், ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்