“பூசி மொழுக நினைக்கிறார் ஆளுநர் தமிழிசை!” – முதல்வர் ரங்கசாமியின் விரக்தி குறித்து நாராயணசாமி

அரசு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாதாதால் தன்னால் எதையும் செய்ய முடியவில்லை என்றும், அதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாக கூறியது புதுச்சேரி அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுவை அரசின் நிர்வாகத்தில் ஏற்படும் காலதாமதம், கவர்னர் தலையீடு ஆகியவற்றை சுட்டிக்காட்டியே முதலமைச்சர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசினார்.

இதை ஆளுநர் தமிழிசை பூசி மெழுக பார்க்கிறார். ஆளுநருக்கும், முதலமைச்சருக்குமிடையே கருத்துவேறுபாடு உள்ளது. இதனால்தான் அரசு அனுப்பிய வழக்கறிஞர்கள் நியமன கோப்பில் கவர்னர் மாற்றி முடிவெடுத்தார். ஆனால் உண்மைக்கு புறம்பாக  பொய்களை பேசி வருகிறார். ஆளுநர் தமிழிசை சூப்பர் முதலமைச்சராக செயல்படுகிறார் என்று கூறி வருகிறேன். முதலமைச்சர் ரங்கசாமியின் புலம்பல் அதனை உறுதி செய்யும் விதமாக உள்ளது. டம்மி முதலமைச்சராக இருக்கிறார் ரங்கசாமி.

முதல்வர் ரங்கசாமி

ஆளுநரையோ மத்திய அரசையோ எதிர்க்கும் தெம்பும், திராணியும் ரங்கசாமியிடம் இல்லை. மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக நாங்கள் கூறிய கருத்துக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் பதிலளித்துள்ளார். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது மாநில அந்துஸ்து பெறவில்லை என  கூறியுள்ளார். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, லட்சுமிநாராயணன் புதுவையில் காங்கிரஸ் அமைச்சராக இருந்தார். அதன்பிறகு இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தார். தற்போது புடம்போட்ட தங்கம்போல பேசுகிறார். தேவகவுடா பிரதமராக இருந்தபோது உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா, மாநில அந்தஸ்து தர ஒப்புதல் அளித்தார்.

ஆனால் மாஹே, ஏனாம் பிராந்தியங்களை கைவிட வேண்டும் என நிபந்தனை விதித்தனர். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் மாநில அந்தஸ்து தடைபட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை ரங்கசாமி முதலமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம் அவர் மாநில அந்தஸ்து குறித்து பேசவில்லை. மத்திய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்கள் மாநிலத்திற்கு எந்த தொந்தரவும் தரவில்லை. மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டதால் கூடுதல் நிதியை பெற வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் தரப்பில் சிறப்பு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தினோம்.

அந்த கோரிக்கை 2016-ல்தான் மாறியது. நான் முதலமைச்சராக இருந்தபோது மாநில அந்தஸ்து கேட்டு சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்தோம். டெல்லி ஜந்தர் மந்தர் முன்பு போராட்டம் நடத்தினோம். பாராளுமன்றத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து மனு அளித்தோம். இந்த உண்மைகளை மறைத்து மாநில அந்தஸ்திற்காக நானும், காங்கிரஸும் போராடவில்லை என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவிக்கிறார்.

கட்சி மாறியதால்  அவர் பொய் பேபசுகிறார். நாங்கள் அதிகாரம் கேட்டதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. முதலமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்திற்காக பிரதமரை சந்திக்க எம்.எல்.ஏ-க்களை டெல்லி அழைத்து செல்வாரா ? என்னையும், வைத்திலிங்கம் எம்.பி, மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரை லட்சுமிநாராயணன் மண் குதிரை என கூறியுள்ளார். இந்த மண் குதிரைகள்தான் அவருக்கு காங்கிரஸில் சீட் கொடுத்தது. தொடர்ந்து அவர் இதேபோல பேசி வந்தால் அவரின் தோலை உரிப்போம்.

ரங்கசாமி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மூன்று மண்  குதிரைகளும் காங்கிரஸ் தொண்டர்களோடு போராட்டத்தில் பங்கேற்போம். அமைச்சர்களின் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம். அவரைப்பற்றிய தகவல்களை தேவைப்பட்டால் சொல்ல நேரிடும். மாநில அந்தஸ்து விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் இடையே கருத்துவேறுபாடு உள்ளது. தேர்தல் சமயத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தருவோம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

ஆனால் இன்று மாறுபட்டு பேசி வருகின்றனர். முரண்பட்ட இரு கட்சிகளின் கூட்டணி நீண்டகாலம் நீடிக்காது. எந்த கட்சியில்தான் கருத்து வேறுபாடு இல்லை? எங்கள் கருத்து வேறுபாடை கட்சிக்குள்பேசி தீர்ப்போம். மற்ற கட்சிகள் இதில் தலையிட வேண்டாம்” என்றவரிடம், “அமைச்சரின் உடல் தோலை உரித்துவிடுவேன் என்றா கூறுகிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவரின் ரகசியங்களை வெளியிடுவேன் என்ற ரீதியில்தான் கூறினேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.