இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிலாளர்கள் மற்றும் கூடுதல் பதிலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில், அரசு முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சங்கர் போன்ற உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- “கூட்டுறவுத் துறை மூலம் நடைபெறும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 33571 நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் மிகவும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது” என்றுத் தெரிவித்தார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது அறிவிக்கப்படும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது, “அது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது உண்மை. அதற்கான முடிவை முதலமைச்சர் கூடிய விரைவில் அறிவிப்பார்.
அந்த அறிவிப்பு வெளியானதும் அதனை உடனே எங்களது துறை செயல்படுத்தும். ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008-ல்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிலிருந்து மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டாலும் இடையில் நான்கு ஆண்டுக்கு எதுவும் அவர்கள் வழங்கவில்லை.
இப்போது தி.மு.க. ஆட்சியில் தான் நாங்கள் வழங்குகிறோம். இது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில் அவர் அறிவித்ததும் அதை செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.