சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவில்லை என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையில் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று (டிச.21) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பொங்கல் பரிசுத் தொகுப்பு சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அதுபற்றிய முதல்வரின் அறிவிப்பை அறிவதற்கு நாங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அரசு அதுபற்றிய முடிவை எடுத்து அறிவித்தவுடன் செயல்படுத்துவது இந்தத் துறை.
பொங்கல் தொகுப்பு என்பது முதன்முதலாக கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் 2008-ம் ஆண்டுதான் துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட காலத்தில் பொருள்கள் தான் கொடுத்தார்கள். 2011-க்குப் பிறகு ஆட்சி மாற்றம் வந்தபோது, ஆட்சி மாற்றத்தில் வந்தவர்கள், ஜெயலலிதா காலத்தில்கூட ஒரு வருடம் அதைக் கொடுக்கவில்லை.
தொடர்ந்து, ஆண்டுதோறும் இது பொங்கலுக்கு வழங்கப்பட்டு வந்தது என்பதும் நியாயமில்லை. இடையில் நான்கு ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் இது வழங்கப்படாமலேயே இருந்திருக்கிறது, பொருளும் கொடுக்கவில்லை, பணமும் கொடுக்கவில்லை. எதுவும் இல்லாமல் பொங்கலும் வந்தது, சென்றது.
ஆனால், இப்பொழுது அப்படியல்ல. முதல்வர் இதுபற்றிய கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். வெகு விரைவில் முதல்வர் என்ன முடிவு எடுத்து சொல்கிறாரோ, அதைச் செய்வதற்கான துறையாக நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆகவே, முடிவெடுக்க வேண்டியது அரசு, அதைச் செய்வார்கள். ஏதோ இந்த ஆண்டுதான் இதைப்பற்றி எதுவும் செய்யவில்லை என்று ஒரு தோற்றத்தை நீங்கள் உருவாக்க வேண்டாம். கடந்த ஆட்சிக் காலத்தில் நான்கு முறை பொங்கலுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.