பொங்கல் பரிசு ரூ.1000? முடிவை அறிவிக்கும் ஸ்டாலின் – அமைச்சர் கொடுத்த ஹிண்ட்!

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.2500 வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த ஆண்டு, தைப் பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கரும்பு, நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மொத்தம் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது பொதுமக்களை ஏமாற்றமடைய செய்தது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன. பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த மளிகைப் பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்கம் வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், கடந்த ஆண்டு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்களை குறைத்து விட்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கலாமா என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், பொங்கல் பண்டிகையையொட்டி, குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய டிசைனில் வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது. மொத்தம் 15 டிசைனில் வேட்டி சேலைகள் வழங்கப்படவுள்ளன. ஜனவரி 10ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொங்கல் தொகுப்பு, பரிசு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

பொங்கல் பரிசு தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை தமிழக அரசு நடத்தியுள்ள நிலையில், பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை பதிலாளர்கள், கூடுதல் பதிலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பொங்கல் தொகுப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், துபற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது உண்மை. அதுபற்றிய முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார். அந்த அறிவிப்பு வந்ததும் எங்களது துறை செயல்படுத்தும் என்றார்.

“பொங்கல் தொகுப்பு வழங்குவது என்பது முதன் முதலாக கலைஞர் ஆட்சி காலத்தில் 2008ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அப்போது மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பொருட்கள் வழங்கப்பட்டாலும் இடையில் ஓராண்டு தரவில்லை. அதுமட்டுமல்ல இடையில் 4 ஆண்டுகளுக்கு எதுவும் அவர்கள் வழங்கவில்லை. இப்போது திமுக ஆட்சியில் நாங்கள் வழங்குகிறோம். இது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார். விரைவில் அவர் அறிவித்ததும் அதை செயல்படுத்துவோம்.” என்றும் பெரிய கருப்பன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் லாபகரமாக இயங்கி கொண்டிருக்கிறது. நியாய விலைக் கடைகளில் அரசு மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் முறையாக மக்களிடம் சென்றடைவது உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.