புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் தீவிரம் காட்டி வரும் ஒன்றிய பாஜ அரசு, கடந்த 2014ம் ஆண்டு முதல் இதுவரை பங்கு விற்பனை மூலம் 4 லட்சம் கோடிக்கும் மேல் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் பணியில் ஒன்றிய பாஜ அரசு படு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக பாஜ அரசு பொறுப்பேற்றபோதிருந்ேத இந்த பணியில் கவனம் செலுத்த துவங்கியது. முதல் கட்டமாக இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், இன்ஜீனியர்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய பொதுத்துறை நிறுவன பங்குகளை வௌியிடுவதாகவும், இதன் மூலம் 40,000 கோடி திரட்டவும் இலக்கு நிர்ணயித்ததாக, அப்போதைய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் மாயாராம் கூறியிருந்தார். அரசு பங்கு விலக்கல் மூலம் நிதி திரட்டுவதற்கான பணிகள் துரிதப்படுத்திய நிலையில், பிஎச்இஎல் பங்குகளும் வெளியிடப்பட்டன.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு சில மாதங்களிலேய 7 நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 3000 கோடி திரட்டப்பட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பிஎச்இஎல் பங்கு விற்பனைகள் விலை நிர்ணயிப்பதில் தாமதம் ஆனாலும், அடுத்தடுத்த முயற்சிகளில் ஒன்றிய அரசு வெற்றி கண்டது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டிலும் தனியார் மயமாக்கல் மூலமும் பொதுத்துறை பங்குகள் மட்டுமின்றி சொத்துக்கள் விற்பனை மூலமாகவும் நிதி திரட்டுவதில் இலக்கு நிர்ணயித்து ஒன்றிய அரசு செயல்பட்டு வந்தது. இதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை 4.04 லட்சம் கோடியை ஒன்றிய அரசு திரட்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஓஎப்எஸ் முறையில் 59 முறை பங்கு வெளியிட்டு விற்பனை செய்ததன் மூலம் அதிகபட்சமாக 1,07,566 ேகாடி திரட்டப்பட்டுள்ளது. இது, மொத்த நிதி திரட்டலில் 26.58 சதவீதமாகும்.
அடுத்ததாக, 10 முறை இடிஎப் மூலம் பங்குகள் வெளியிடப்பட்டு 98,949 கோடியை ஒன்றிய அரசு ஈட்டியது. இது மொத்த நிதி திரட்டலில் 24.45 சதவீதம். நிதியமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதுதவிர, ஏர் இந்தியா உட்பட 10 முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தன் மூலம், மொத்தம் ஈட்டிய தொகையில் 17 சதவீதம், அதாவது, 69,412 கோடியை ஒன்றிய அரசு ஈட்டியுள்ளது. இதுபோல் மேற்கண்ட 9 ஆண்டுகளில் 17 பொதுத்துறை பங்குகள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு, 50,386 கோடி திரட்டப்பட்டுள்ளது. இதில், ஐபிஓ பங்கு வெளியீட்டின் மூலம் எல்ஐசி பங்குகளை விற்று திரட்டப்பட்ட 20,516 கோடியும் அடங்கும். இத்துடன் சேர்த்து மொத்தம் 4.04 லட்சம் கோடியை ஒன்றிய பாஜ அரசு திரட்டியுள்ளது. வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் வேலையல்ல என்பதை ஒன்றிய நிதியமைச்சர்கள் பலர் தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.
இதில் அரசு உறுதியாக இருப்பதால்தான், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதில் ஒன்றிய பாஜ அரசு படு தீவிரம் காட்டி வருகிறது. ஒவ்வொரு துறையிலும் ஒரு நிறுவனம் தவிர பிற நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்ற முடிவை ஒன்றிய அரசு எடுத்தது. இருப்பினும், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகள் விற்பனைக்கு எதிர்ப்புகள் வந்தபோதும், விற்பனையை செயல்படுத்த ஒன்றிய அரசு தயக்கம் காட்டவில்லை. ஒன்றிய அரசின் தனியார் மய கொள்கையும், தொடரும் பங்கு விலக்கல் நடவடிக்கைகளும் பொதுத்துறை அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல், அரசு சேவைகள் தனியார் மயமாகிவிட்டால் அதற்கான சேவை கட்டணங்கள் பல படங்கு அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.