மதுரை: மதுரையில் இரு பள்ளி மாணவிகள் கடத்தல் வழக்கில் கைதான 2 பெண்கள் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரையை சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகை செல்வம். இவரது மகள்கள் அனுஸ்ரீ, ஜெயஸ்ரீ. இருவரும் தெப்பக்குளம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்தனர். கடந்த 16.12.2017-ல் இருவரும் காரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து போலீஸார் போல் வந்த கும்பல் கார் ஓட்டுனர் பாண்டியை தாக்கி விட்டு மாணவிகளை கடத்திச் சென்றது.
பின்னர் கடத்தல் கும்பல் மாணவிகளின் தந்தையை போனில் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி பணம் கேட்டுள்ளது. பின்னர் ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். இது குறித்து தெப்பக்குளம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் ஏற்பாட்டின் பேரில் ரூ.50 லட்சம் பணம் கொடுத்து மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பின்னர் போலீஸார் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரவீந்திரன், கண்ணன், மணிராஜு, மணிகண்டன், வைரமுத்து, குணசேகரன், ராதாகிருஷ்ணன், கலாதேவி, ஜீவிதா, சின்னதுரை ஆகியாரை கைது செய்தனர்.
இந்த வழக்கை மதுரை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் விசாரித்தார். அவர் 2 பெண்கள் உட்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.