விவசாயிகள் ஒப்புதலின்றி நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன்

“அன்னூரில் விவசாயிகள் ஒப்புதல் இன்றி நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது,” என, அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளார்.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

கிட்டாம்பாளையத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 316 ஏக்கர் கடந்த 2006 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக, ஆசியாவில் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைப்பதற்காக, கலைஞரின் வேண்டுகோளுக்கிணங்க திட்டமானது செயல்படுத்தப்பட்டது. அதிமுக பொறுப்பேற்ற பிறகு இத்திட்டமானது 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.

இத்திட்டமானது கிடப்பில் போடப்பட்ட நிலையில் இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்பாக கருமத்தம்பட்டி பகுதியில் நேரில் ஆய்வு செய்து சாலைகள் அமைப்பது, குடிநீர் தொட்டிகள் அமைப்பது, அலுவலக கட்டிடங்கள் ஆகியவை மேம்படுத்துவதற்காக 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாயும், பயனாளிகளின் தரப்பில் 14 கோடி ரூபாயும் மதிப்பீடு போடப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இன்னும் நான்கு அல்லது ஆறு மாத காலத்தில் இவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு, வருகின்ற ஒரு வருடத்தில் தொழிற்பேட்டை பயன்பாட்டிற்கு வரும். 50,000 பேர் இதில் வேலை வாய்ப்பு பெறுவார்கள். அன்னூர் பகுதியில் விவசாயிகளின் ஒப்புதலோடு தான் நிலம் கையகப்படுத்தப்படும். மின்சார கட்டணம் 10 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டு உள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் போராடி வருகின்ற, ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதலில் ஏற்கனவே நிலம் ஆய்வுகள் செய்யப்பட்டு விட்டது. புதிதாக எந்த நிலமும் கையகப்படுத்தப்பட மாட்டாது. விவசாயிகளின் ஒப்புதல் இன்றி தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலங்களை அரசு கையகப்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.