தமிழ்நாடு காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு நேற்று ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பில் பேசிய நபர், “நான் ஜப்பானிலிருந்து பேசுகிறேன். மாங்காடு பகுதியில் கபீர் முகமது என்ற நபர் தன்னுடைய வீட்டில் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கிறார்” என்று தகவலைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்த தகவல் மாங்காடு பகுதி போலீஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் மாங்காடு முத்தமிழ் நகருக்கு விரைந்திருக்கிறார். இந்த செய்தி அந்தப் பகுதியில் பரவவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த முகவரியில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் வசித்து முன்பு வசித்துவந்தது தெரியவந்திருக்கிறது. மேலும், அங்கு சென்ற போலீஸார் கபீர் முகமது குறித்து விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
கபீர் முகமது என்பவர், இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருந்திருக்கிறார். சமீபத்தில் அவருக்குச் சாலை விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே மாங்காடு பகுதியிலிருந்து புழல் பகுதிக்கு மாறியிருக்கிறார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில், கபீர் முகமது விபத்துக்குப் பிறகு பல்வேறு ஆன்லைன் லோன் ஆப்கள் மூலமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றிருந்தது தெரியவந்தது.

மேலும், அவர் மாங்காடு முகவரியைக் கொடுத்து கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனை கபீர் முகமது சரிவரத் திரும்பச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவரை சிக்கவைக்க அந்த ஆன்லைன் நிறுவனங்கள், `கபீர் முகமது வெடிகுண்டு தயாரிக்கின்றார்’ என போலியான தகவலைக் கூறியிருக்கலாம் என்கிறார்கள் போலீஸார்.
இந்த நிலையில், போலீஸார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.