இந்தியாவில் இயேசுவால் கொரோனா பரவல் பணிந்தது; அரசு உயரதிகாரி பேச்சால் பரபரப்பு

ஐதராபாத்,

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து, மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து வருகின்றன. மருத்துவ அதிகாரிகள் அவர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். இதனை முன்னிட்டு மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில், கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் அரசு ஊரடங்கு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள், முக கவசம், கொரோனா தடுப்பூசி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை முதல், இரண்டாவது மற்றும் பூஸ்டர் டோஸ் என 219 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தெலுங்கானாவின் கொத்தகுடெம் மாவட்டத்தில் பத்ராத்ரி நகரில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அது தொடர்புடைய கூட்டம் ஒன்று நடந்தது. இதில், தெலுங்கானா சுகாதார இயக்குனர் ஜி. ஸ்ரீனிவாச ராவ் என்பவர் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, இந்தியாவில் இயேசுவின் தயவால் கொரோனா பரவல் பணிந்தது என்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவமே முக்கிய பங்கு வகித்தது என்றும் கூறினார்.

நாம் நல்லது செய்கிறோம். அதனால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை. இயேசுவாலேயே கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளன என்று பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், மனிதகுலம் ஆபத்தில் உள்ளது. நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால், பூமியில் நடந்தவர் இயேசு ஒருவரே. முன்னோர்கள் இவை எல்லாவற்றையும் பார்த்து, வருங்கால தலைமுறைக்கும் கூறியுள்ளனர் என்று பேசியுள்ளார்.

அதனால், மதம், சாதி கடந்து இயேசுவின் செய்தியை வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பேசியுள்ளார். அரசு உயரதிகாரியாக உள்ள ஒருவரின் இதுபோன்ற பேச்சால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.