மாஸ்கோ: உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை ரஷ்ய நோக்கமாக கொண்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நிகழ்த்தி 10 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 10 மாதங்களில் முதல்முறையாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் செய்தார். ஜெலென்ஸ்கி – பைடன் பேச்சுவார்த்தைக்கு ஒருநாளுக்கு பின் உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதை ரஷ்யா நோக்கமாக கொண்டுள்ளது என்று புடின் பேசியுள்ளார்.
புடின் பேசியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் இலக்கு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம். விரைவில் சிறந்த முறையில் நிச்சயமாக நாங்கள் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்போம்.
விரோதங்கள் அதிகரிப்பது நியாயமற்ற இழப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று நான் பலமுறை கூறியுள்ளேன். அனைத்து ஆயுத மோதல்களும் எதாவது ஒரு வகையில் இராஜதந்திர ரீதியில் சில வகையான பேச்சுவார்த்தைகளுடன் முடிவடைகின்றன. எவ்வளவு முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள். இந்த உணர்வு நம்மை எதிர்ப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் வருமோ அவ்வளவு நல்லது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.