ஓடிடி சினிமாவை அழித்து விடும்: அடூர் கோபாலகிருஷ்ணன் எச்சரிக்கை

இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன். இயக்கியது 10 படங்கள்தான், ஆனால் வாங்கியது 17 தேசிய விருதுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட விருதுகள். வங்க இயக்குனர்கள் ஷியாம் பெனகல், சத்யஜித்ரேவுக்கு நிகராக மதிக்கப்படுகிறவர். அவர் ஓடிடி தளங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: திரைப்படங்கள் என்பது திரையரங்குகளின் காட்சி அனுபவத்திற்காக உருவாக்கப்படுகின்றன. அதை எப்படி சுருக்கி சிறிய திரையில் காட்ட முடியும்? சினிமா என்பது இருண்ட திரையரங்கில் இணைந்து பார்க்கக்கூடிய ஒரு சமூக அனுபவம். தொலைக்காட்சியே கூட ஒரு சமரசம்தான். திரையரங்குகளில் பலமுறை ஓடிய படங்களைத்தான் தூர்தர்ஷனில் வெளியிட்டிருந்தோம். இவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். உண்மையில் திரைப்படங்களுக்கான நோக்கம் இதுவல்ல.

இன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சியில், ஓடிடியில் பார்ப்பதற்காக உருவாக்கப்படும் படங்கள் சினிமாவை அழித்துவிடும். கொரோனா நம்மை இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள் வைத்திருந்தது. இது வீட்டிலிருந்தே படம் பார்க்கும் இடத்திற்கு நம்மை தள்ளியிருக்கிறது. ஆனால், சினிமா உயிர்ப்பித்திருக்க வேண்டுமென்றால், அது சின்னத்திரையை நம்பியிருக்கக் கூடாது. இன்று ஹாலிவுட்டும் கூட இந்தச் சூழல் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. சினிமாவை டைம்பாஸ் என்று நினைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.