புதுடெல்லி: “உருமாறிய புதிய வகை கரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. முகக்கவசம் அணியும் நடைமுறையை மாநில அரசுகள் மீண்டும் கொண்டுவர வேண்டும்” என்று மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் வியாழக்கிழமை விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “உருமாறிய கரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து வைரஸ் மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, வைரஸ் பரவல் குறித்த உலகளாவிய சூழல்களையும் கண்காணித்து, அதற்கு தக்கபடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசுகள் உருமாறிய வைரஸ்களின் மாறுபாட்டை சரியான தருணத்தில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படியும், முகக்கவசம் அணிவதை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல், தனிமனித இடைவெளியும் பின்பற்றப்பட வேண்டும்.
கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருவதை, தொடர்ந்து கண்காணித்து, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் மத்திய சுகாதார அமைச்சகம் முனைப்புடன் செயல்படுகிறது. கரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மாநில அரசுகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 220 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக உலக அளவில் கரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரித்துள்ளன. ஆனாலும் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று மத்திய அமைச்சர் கூறினார்.