புதுடில்லி,புதுடில்லியில், குழந்தை ஆபாச படங்கள், ‘வீடியோ’க்கள் வெளியிட்டதாக, 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்ததுடன், 36 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
குழந்தை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்வோரை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, புதுடில்லி போலீசாரின் கீழ் சிறப்பு புலனாய்வு படை இயங்கி வருகிறது.
இப்படை, தேசிய குற்ற ஆவணப் பிரிவு, ஐ.நா.,வின் காணாமல் போன குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்கும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து, புதுடில்லியில் அதிரடி வேட்டை நடத்தியது.
இதில், குழந்தை ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக, பல்வேறு காவல் நிலையங்களில் 105 வழக்குகளை பதிவு செய்ததுடன், இக்குற்றச்செயல்களில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
சமூக வலைதளங்களான ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம்’ ஆகியவற்றுடன், புதுடில்லி போலீசார் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இவற்றில் குழந்தை ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவிடுபவருக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பப்படும்.
அதோடு, அப்பயனரின் இருப்பிடத்தை கண்டறிய உதவும் இணையதள பயன்பாட்டு முகவரியையும் கைப்பற்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement