கடந்த 2020-ம் ஆண்டு கோவிட் தொற்று பரவலைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து ஊரடங்கைப் பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டனர். அந்த ஊரடங்கை, இன்னும் ஒரு தாயும், மகளும் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆந்திரபிரதேசம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குய்யேரு கிராமத்தைச் சேர்ந்தவர் கர்நீதி கே. சூரியபாபு. இவரின் 44 வயதான மனைவி கே. மணி மற்றும் இவரின் 20 வயது மகள் துர்கா பவானி, தங்களுடைய வீட்டின் ஒரு சிறிய அறையில் 3 வருடங்களாக அடைபட்டுக் கிடந்துள்ளனர். உடை, உணவு, வெளிச்சம் என எதற்கும் அவர்கள் அந்த அறையை விட்டு வெளிவருவதில்லை. முழுவதுமாக மக்களிடம் பேசுவதையே துண்டித்துள்ளனர்.
கொரோனா சமயத்தில் வெளியே சென்றால், எங்கே உயிர் பறிபோய்விடுமோ என பயந்து இவர்கள் இருவரும் இப்படிச் செய்துள்ளனர். உறவினர்கள் மீதுள்ள அவநம்பிக்கையினாலும் தங்களை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற பயமும் இவர்களுக்கு இருந்து உள்ளது.
மனைவி, மகளின் நிலையைக் கண்டவர், தினமும் சமைத்து ஜன்னல் வழியே கொடுத்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களாக அந்த உணவையும் இவர்கள் பெற மறுத்ததால், வலு குன்றி, கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திடீரென அறையில் இருந்து வந்த இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு விரைந்த காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையின் மூலையில் ஒடுங்கி, இருவரும் ஒரு போர்வையைச் சுற்றிக்கொண்டு இருந்தனர். அறையில் இருந்து வெளிவர மறுத்தவர்களை அதிகாரிகள் பல மணி நேரம் பேசி சமாதானப்படுத்தி, பின் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து மருத்துவர் ஹேமலதா கூறுகையில், “பெண்களின் உடல் மற்றும் மனநிலை பரிசோதிக்கப்பட்டது. உடல்நிலை சீராக உள்ளது. அவர்களை மனநல மருத்துவரின் கண்காணிப்பில் வைத்துள்ளோம்’’ என்றார்.
மனநல மருத்துவர் ரெமி ரெட்டி கூறுகையில், “இவர்கள் ஸ்கிஸோஃப்ரினியா (Schizophrenia) எனப்படும் மனநல பாதிப்புக்கு ஏழு வருடங்களாகச் சிகிச்சை எடுத்து வருகின்றனர். கோவிட் தொற்றின் பயம் இந்த நோயை அதிகரித்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
கோவிட் தொற்று உடல் ரீதியாக, பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, உளவியல் ரீதியாகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று…
இதுவும் கடந்து போகும்.. திடமாய் இருப்போம்!