கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கூக்கல்தொரை வழியாக கோத்தகிரி செல்லும் சாலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதன் அருகே நேற்று காலை திடீரென மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது மண், ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தன. இதனால் கூக்கல்தொரை பகுதியில் இருந்து கோத்தகிரி போன்ற நகர்ப்புற பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தகவலறிந்து நெடுஞ்சாலை துறையினர் வந்து மண், ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மாற்று வழிப்பாதையின் சாலையின் மறுபக்கம் வந்து மண், ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கோத்தகிரி மற்றும் முக்கிய நகர்ப்புற பகுதிகளுக்கு செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. விழும் நிலையில் இருந்த பெரிய அளவிலான ராட்சத பாறைகளை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணியையும் செய்தனர். சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக இந்த பணி நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் அந்த வழியாக ஒரு சில வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர்கள் அமைத்து சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.