தமிழ், மலையாளம், கன்னடம் உள்பட 24 மொழிகளில் எழுதப்படும் சிறந்த இலக்கியம் சார்ந்த நாவல்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்னர் தமது எழுத்துப் பணிக்காக டான்சீறி சோமா விருது, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
காலா பாணி நாவலானது 1801ஆம் ஆண்டு 6 மாதங்கள் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்டது. நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை என்று இந்த நாவலில் அன்றைய கால தமிழர்களின் வாழ்க்கை, சூழல், ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
எழுத்தாளர் மு.ராஜேந்திரன் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வடகரை கிராமத்தில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும் தமிழக வரலாற்றின்மீதும் பற்றுமிக்கவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருக்குறளில் சட்டக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இந்திய ஆட்சிப்பணியில் பொறுப்பேற்று தமிழ்நாட்டின் பலவிதமான துறைகளில் பணியாற்றியானார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தபோது அப்பகுதியில் இயற்கை வளம் சார்ந்த மலைப் பகுதிகளை கனிம வளக் கொள்ளையர்களிடம் பறிபோவதைத் தடுத்து நிறுத்தியவர் என்ற பெருமை இவருக்குண்டு.
மேலும், வரலாற்றின் மீது தணியாத ஆர்வம் கொண்டு நேரில் களப்பணிகளில் ஈடுபட்டார். தமிழ்நாடு வரலாற்று கால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தேடியெடுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.