காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து பெறுவதால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்து அறிந்த பின்னரே அது குறித்து முடிவெடுக்க வேண்டும் என புதுச்சேரி பாஜக தலைவர் வி.சாமிநாதன் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று (டிச.22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் வி.சாமிநாதன் காரைக்காலில் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் நிச்சயமாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இதனால் தமிழ் மொழிக்கு பாதிப்பில்லை. கட்டாயம் தமிழ் மொழிப்பாடம் இடம்பெறும். திமுக, காங்கிரஸை விட பாஜகவுக்கு தமிழ்ப் பற்று அதிகம் உள்ளது. முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா உள்ளிட்ட காங்கிரஸ், திமுகவினர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
ஏழை மாணவர்களும் தரமான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் இது செயல்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் நாராயணசாமி தற்போது எதிராக பேசி வருகிறார். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நலனுக்கு எதிராக உள்ள அவர்களை எதிர்த்து பெற்றோர்கள் போராட வேண்டும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதால் கிடைக்கக் கூடிய சாதக, பாதகங்கள் குறித்து உரிய ஆய்வு செய்து, விவாதித்து, வல்லுநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த பின்னரே அது குறித்து முடிவெடுக்க வேண்டும். மாநில அந்தஸ்து தொடர்பாக மக்களின் விருப்பம் என்னவோ அதற்கு பாஜக ஆதரவளிக்கும். இது குறித்து குழு அமைத்து, உரிய ஆய்வு செய்ய புதுச்சேரி அரசை பாஜக வலியுறுத்தும்.
50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், மாநில அந்தஸ்து பெற எதுவுமே செய்யாமல், தற்போது இதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்ட அமலாக்கம், மாநில அந்தஸ்து தொடர்பாக வி.நாராயணசாமி கூறி வரும் கருத்துகள் கண்டிக்கத்தக்கது” என்றார்.