தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது இயல்பு நிலைக்கு வந்தது. இதையடுத்து, தற்போது பனிக்காலம் தொடங்கி உள்ளது. பொதுவாக வருடத்தில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம்.
அதன் படி, நாட்டில் வாடா மாநிலங்களில் சற்று அதிகளவு பனிப்பொழிவு ஏற்பட்டு விபத்துகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில், தமிழகத்திலும் மார்கழி மாதம் தொடங்கியது முதல் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சென்னையில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, தி.நகர், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
இதனால் சாலைகளே தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பொறுமையாக செல்கின்றனர். இந்த பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்..