சென்னை அம்பத்தூர், பத்மாவதி ஸ்ரீனிவாசா நகர், மணிகண்டன் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமர குரு (55). இவர் வங்கதேசத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் மேலாளராகப் வேலைப்பார்த்து வந்தார். இவரின் மனைவி லலிதா (42). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முத்துகுமரகுரு, விடுப்பில் சென்னைக்கு வந்தார். பின்னர் அவர், தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் நாம் தற்போது குடியிருக்கும் இந்த வீட்டை விற்றுவிட்டு புதியதாக வேறு இடத்தில் வீடு கட்டி, கார் வாங்கி வாழலாம் என்று கூறியிருக்கிறார்.

இவரின் இந்த முடிவுக்கு மனைவி லலிதா மற்றும் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் புதிய வீடு வாங்குவது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் முத்து குமரகுரு வீட்டில் உள்ளவர்களிடம் சகஜமாக பேசாமல் தனிமையில் இருந்திருக்கிறார். மேலும் மனவேதனையில் இருந்தாகவும் தெரிகிறது. இந்தச் சூழலில் நேற்றிரவு (21.12.2022) வழக்கம் போல முத்து குமரகுரு தன்னுடைய படுக்கையறைக்குச் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இன்று (22-ம் தேதி) அதிகாலை 4 மணியளவில் லலிதா, படுக்கையறையின் கதவை திறக்க முயன்றார்.
கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் அதைத் திறக்க முடியவில்லை. அதனால் அவர் நீண்டநேரமாக கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கைகளில் எலக்ட்ரீக் ஒயர்கள் சுற்றப்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி முத்து குமரகுரு இறந்து கிடந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர், அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முத்து குமரகுருவின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முத்துகுமரகுரு, மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், “சடலமாக மீட்கப்பட்ட முத்துகுமரகுருவின் இரண்டு கைகளிலும் மின்வயர்கள் சுற்றப்பட்டிருந்தன. அதனால் அவர் மின்சாரத்தை தன் உடலில் பாய வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அவரின் படுக்கையறையில் ரூபாய் நோட்டுக்கள், வங்கி பாஸ் புத்தகங்கள், டைரிகள், இரண்டு செல்போன்கள் உள்ளன. அவற்றை கைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.