“நடிகர் வடிவேல் நானும் ரவுடி தான் எனக் கூறுவது போல், நானும் அதிமுக தான் என, கூறி வருகிறார்,” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை தனிக்கட்சி துவங்கி பாருங்கள் என சவால் விட்டு இருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிப்பாடு.
தனி கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே
, ஈபிஎஸ் இருவரும் இருக்கும் போது தான் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தி அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நடத்துவது தான் பொதுக்குழு. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர், அது தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம் தான் உண்மையான மாவட்ட செயலாளர்கள் கூட்டம். ஓ.பன்னீர்செல்வம் கூட்டிய கூட்டம் டுபாக்கூர் கூட்டம்.
பொதுக்குழுவின் வரவு – செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீரித்து உள்ளது. அதில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயர் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. தற்போது சின்னமும், அதிமுகவும் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளது. அவர் ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்?அதற்கு என்ன அவசியம்?
ஓ.பன்னீர்செல்வம் வேண்டுமானால் தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். நடிகர் வடிவேல் சினிமா படத்தில் நானும் ரவுடி தான் என்று கூறுவது போல் ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு அதிமுகவிற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.
98 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கின்றனர். அவர் தான் பொதுச் செயலாளர். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தற்போது எடப்பாடி பழனிசாமி தான். அவர் பின்னால் தான் அதிமுக உள்ளது. ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என ஆலோசனை சொல்ல வேண்டாம். அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டவர்கள் மாவட்ட செயலாளர் கூட்டமோ, கூட்டணி குறித்து பேசுவதற்கு அவர்கள் தனிபாதையை நோக்கி செல்வதற்கு வழி வகுக்குமே தவிர அவர்கள் நடத்தும் கூட்டம் அதிமுகவை கட்டுப்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.