சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் 1 மில்லியன் டன் திறனுடைய பெட்ரோல் சுத்திகரிப்பாலை நாகையில் 1993 –ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதனை, 9 மில்லியன் டன் திறனுடைய ஆலையாக விரிவுபடுத்த சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக, “புதிதாக நாகையில் அமைய உள்ள பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகிறது.. விவசாயிகளின் எதிர்ப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்படுமா?” என்ற கேள்வியை திங்கட்கிழமை (19-12-2022) நாடாளுமன்றத்தில் எழுப்பினார் எம்.பி அன்புமணி ராமதாஸ்.
“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் 2020-ல், சுத்திகரிப்பு ஆலை அமைவதற்கு தடை ஏதும் குறிப்பிடவில்லை” என்ற பதிலை கொடுத்தது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இவ்வாறு தெரிவித்த நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுமா.. அதற்கான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அதற்கு முன், இதுவரை டெல்டாவில் முன்னெடுக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

-
1970 -களில், டெல்டா மாவட்டங்களில் எண்ணெய் எடுப்பதற்கான ஆய்வுப் பணிகளை தொடங்கியது ஓ.என்.ஜி.சி நிறுவனம்.
-
1992 -ம் ஆண்டு, ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு, எங்கெல்லாம் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
-
1998 -ம் ஆண்டு, எண்ணெய் எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் அப்போது கச்சா எண்ணெய் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது.
-
2011-ம் ஆண்டு, மீத்தேன் எரிவாயு எடுப்பது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அன்றைய ஆளுங்கட்சியான திமுக, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (GEECL) என்ற நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது.
அதற்குப்பின், ஆட்சிக்கு வந்த அதிமுக மீத்தேன் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது தொடர்பாக, ஆராய்ந்து முடிவெடுக்க நிபுணர் குழு ஒன்றையும் அமைத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. குழுவின் பரிந்துரைகள் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக அமைந்ததால், அத்திட்டத்திற்கு 2015 -ல் தடை விதிக்கப்பட்டது.

மீத்தேன் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டப் பின்பு கிளம்பியது புது பூதம். 2017 -ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 44 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை ஜெம் (GEM) லேபரட்டீஸ் நிறுவனத்திற்கு வழங்கியது மத்திய அரசு.
தொடர்ச்சியாக இது போன்ற திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வந்ததை அடுத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கோரிக்கை வலுவாக எழுந்தது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் 2020
டெல்டா விவசாயிகளின் பல வருட கோரிக்கையான, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம், 2020-ல் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில பகுதிகளிலும், காப்பர் உருக்கும் ஆலை, அலுமினியம் மற்றும் துத்தநாகம் (zinc) உருக்கும் ஆலை, தோல் பதப்படுத்தும் ஆலை, இரும்பு உருக்கும் ஆலை, கப்பல் உடைக்கும் ஆலை போன்ற ஆலைகள் தொடங்க தடை விதிக்க இச்சட்டம் வழிவகுத்தது.
அதுமட்டுமில்லாமல், நிலக்கரி, மீத்தேன் வாயு, ஷேல் எரிவாயு போன்ற எரிவாயுக்களை எடுக்கவும் தடை விதிக்க இச்சட்டம் வழி வகுத்தது. ஏற்கனவே தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களை இச்சட்டம் தடுக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் விவசாய நிலங்களில் பைப் அமைப்பது தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சட்டத்திருத்தம் தேவையா ?
இதுகுறித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் தா.ஜெயராமனிடம் பேசினோம்.”பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் 2020-ல், தடை செய்யப்பட்ட திட்டங்கள் அல்லது தொழில்கள் பட்டியலில், இல்லாதவற்றையெல்லாம் டெல்டா பகுதியில் செயல்படுத்தலாம் என்று அர்த்தமாகாது. எங்களை பொறுத்த அளவில் எண்ணெய் எடுக்கும் பணிகள் நிலத்திலும் சரி, கடலிலும் சரி… செயல்படுத்தக் கூடாது.
இச்சட்டத்தில், தடை செய்யப்பட்ட திட்டங்கள் பட்டியலில் கப்பல் உடைப்பு தொழிற்சாலை, காப்பர், இரும்பு போன்ற உலோகங்களை உருக்கும் ஆலைகள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போன்ற தொழிற்சாலைகள் டெல்டா பகுதியில் பொதுவாகவே செயல்படுவதில்லை. இங்கு செயல்பட்டு வரும் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலைகளை, தடை செய்யப்படும் திட்டங்களை பட்டியலில் சேர்க்க வேண்டும். அதேபோன்று விவசாய நிலங்களில் குழாய் அமைப்பதற்கு இச்சட்டம் அனுமதி வழங்குகிறது. அதனை மாற்றி சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். காவிரி டெல்டா படுகையில் எண்ணெய் எடுப்பது தொடர்பான எந்தப் பணிகளும் நடக்கக்கூடாது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்பில் கொடுக்கப்பட்ட பதில், அவர்களின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது” என்று கூறி முடித்தார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டுவரப்பட்டதின் அடிப்படை நோக்கமே டெல்டா பகுதிகளில் விவசாயத்தை பாதுகாக்கத்தான். விவசாயத்தை பாதிக்கும் எவ்வித திட்டங்களும், தொழிற்சாலைகளும் டெல்டா பகுதிகளில் தொடங்க கூடாது என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை இச்சட்டம் உறுதிப்படுத்த வேண்டும்.