தேசிய மாணவர் படையணிக்கு சீனா 5 மில்லியன் ரூபா நன்கொடை

இலங்கைக்கான சீன தூதரகம் தேசிய மாணவர் படையணியின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (டிசம்பர் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களிடம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் வான் டொங் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க சீன தூதரகம் இந்த நன்கொடையை வழங்கியது.

நாட்டிற்கு நல்லொழுக்கமுள்ள இளைஞர்களையும் எதிர்காலத் தலைவர்களையும் உருவாக்கும் நோக்கிலும் தேசிய மாணவர் படையணியின் பயிற்சி நடவடிக்கைளை மேலும் மேம்படுத்தும் நோக்குடனும் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் சீன பிரதி பாதுகாப்பு இணைப்பாளர் கேர்ணல் காவோ பின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

MOD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.