நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா நாளை (24ம் தேதி) இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் ஜனவரி 2ம் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்கா பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதி நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் சாகிபு மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தஞ்சாவூரை ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிகொடுத்த, நாகூர் தர்கா அலங்கார வாசலில் உள்ள பெரிய மினரா, தலைமாட்டு மினரா, முதுபக் மினரா, ஒட்டு மினரா ஆகிய மினராக்களில் பாய்பரம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாகூர் தர்கா பரம்பரை போர்டு ஆப் டிரஸ்டிகள், ஆலோசனை குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.