நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வருகிறது. என்எல்சி புதிய அனல் மின் நிலையத்தில் நேற்று மதியம் பாய்லரில் ஏற்பட்ட கசிவு காரணமாக திடீரென்று தீப்பற்றியது.
அப்போது, அங்கு பணியில் இருந்த நெய்வேலி அடுத்த வீரட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (47), வீரசிங்ககுப்பம் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(54), ஊத்தங்கல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ்(47), நெய்வேலி வட்டம்-5 பகுதியை சேர்ந்த சுரேஷ், வடலூர் அடுத்த கோட்டகத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகிய 5 தொழிலாளர்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, என்எல்சி பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தார். என்எல்சி நிறுவன தலைவர் ராகேஷ்குமார், நெய்வேலி எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் ஆகியோர் சென்று காயமடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.