பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.

ஆனால் இன்னும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது நியாயமில்லை. 2012 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தர ஆசிரியர்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள்.

இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, 2017 ஆம் ஆண்டில் 700 ரூபாய் சம்பள உயர்வு, 2021 ஆம் ஆண்டில் ரூ. 2,300 சம்பள உயர்வு வழங்கப்பட்டு இப்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இன்றையக் கால கட்டத்தில் இந்த ஊதியம் போதுமானதல்ல. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் கடந்தும் இன்னும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. அவர்களுக்கு சம்பள உயர்வும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை வர இருப்பதால் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். எனவே தமிழக அரசு, பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளான பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.