சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் அமைய உள்ளது. இதன் காரணமாக 13 கிராமத்தைச் சேர்ந்த 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் உட்பட 4250 ஏக்கர் நிலம், குடியிருப்புகள் கையகப்படுத்துவதால் பரந்தூர், ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து 148 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட பொதுமக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அமைச்சர்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன்படி நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு, தாமோ அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போராட்டக் குழுவினர் விமான நிலையத்தை அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தமிழகத்திற்கு உலக தரம் வாய்ந்த விமான நிலையங்கள் வேண்டும், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் பேசியதாவது “டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருடன் ஒப்பிடுகையில் சென்னை விமான நிலையம் வணிகத்தை இழந்து வருகிறது. சென்னையை தென்னிந்தியாவின் வணிக மையமாக மாற்றும் வகையில் சர்வதேச வசதிகளுடன் திட்டமிட்டு இரண்டாவது விமான நிலையத்தை நிறுவுவதற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பரந்தூர் விமான நிலையத்தை கட்டும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்” என மத்திய அரசை திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 148 வது நாளாக 13 கிராம மக்கள் போராடி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணி விரைவாக தொடங்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழக அமைச்சர்கள் போராட்டக் குழுவிடம் நல்ல முடிவு எட்டப்படும் எனக் கூறுகின்றனர். பரந்தூர் விமான நிலையத்தை பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி அமைப்பதுதான் திமுகவின் நல்ல முடிவா..?? திமுகவின் இத்தகைய இரட்டை வேடம் பரந்தூர் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.