புதுச்சேரியில் ரூ.500 மதிப்பிலான 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.500 மதிப்பிலான 10 பொருட்கள் அடங்கிய இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அம்மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் ஆசிர்வாசத்துடன் முதல்வர் உத்தரவின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.500 மதிப்புள்ள 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. மஞ்சள், பச்சரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு, முழு உளுந்து, பச்சை பயிறு, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் மற்றும் வெல்லம் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, புதுச்சேரியில் உள்ள 3.5 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படவுள்ளன. இதற்காக ரூ.17 கோடி அரசு ஒதுக்கியுள்ளது.

தற்போது இதற்கான டெண்டர் கோரப்பட இருக்கிறது. இந்தப் பொருட்களை அங்கன்வாடிகள் மூலம் விநியோகிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 60 சதவீதம் சிவப்பு அட்டைக்கு மேல் இருக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளளது. அதன்படி, புதுச்சேரியில் 60 சதவீதம் சிவப்பு அட்டைதாரர்களும், 40 சதவீதம் மஞ்சள் அட்டைதாரர்கள் உள்ளனர்.

புதுச்சேரியில் விதிகளை மீறி சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருந்த மாநில அரசு ஊழியர்கள் 14 ஆயிரம் பேரின் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதேபோல் மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது சிவப்பு அட்டை வைத்திருந்தால், உடனே அவர்களது கார்டை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில் ஆய்வு செய்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

காரைக்காலில் ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொண்டது உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2,500 பேருக்கான குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளன” என்று அமைச்சர் சாய் சரவணன் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.