புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்து இன்று 58-வது ஆண்டு – தனுஷ்கோடியின் எஞ்சிய இடங்களை பாதுகாக்குமா தொல்லியல் துறை?

ராமேசுவரம்: புயலின் கோரத்தாண்டவத்தால் உருக்குலைந்துபோன தனுஷ்கோடியில், தற்போது எஞ்சியுள்ள இடங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து, தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து, தலைமன்னாரில் இருந்து கொழும்புக்கு ரயில் போக்குவரத்துத் திட்டத்தை உருவாக்கினர்.

மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்.24-ம் தேதி போர்ட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

1961-ல் தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தனுஷ்கோடியில் மக்கள் 3,197 பேர் வசித்ததாகவும் இங்கிருந்து பருத்தித் துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு, முட்டை,காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட் டுள்ளது.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964, டிச.17-ல் காற்றழுத்த தாழ்வுநிலை அந்தமான் கடல் பகுதியில் உருவானது. அது புயலாக உருவெடுத்து டிச.22-ல் தனுஷ்கோடிக்குள் புகுந்து கோரத்தாண்டவம் ஆடியது. இதில் ரயில் நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தனுஷ்கோடியே உருக்குலைந்து போனது.

புயல் தாக்கி அரை நூற்றாண்டைக் கழிந்த நிலையில், தனுஷ்கோடியை சீர்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலை கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. தொடர்ந்து தனுஷ்கோடி தபால் நிலையமும், கடந்த மே மாதம் புதிய கலங்கரை விளக்கமும் திறக்கப்பட்டன. மேலும் தனுஷ்கோடிக்கு ராமேசுவரத்தில் இருந்து 17.20 கி.மீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடியில் சேதமடைந்த பழமைவாய்ந்த கட்டிடங்களின் பழமை மாறாமல் பராமரித்துப் பாதுகாத்திடும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை இணைந்து ஒருங்கிணைந்து பணியாற்றிட ரூ.3 கோடி மதிப்பில் திட்ட வரைவு 7 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. தனுஷ்கோடி புயலில் மிஞ்சியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க தொல்லியல் துறையும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனுஷ்கோடி மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.