கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த அன்சர் (40), கடந்த 14 -ம் தேதி இரவு ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “ஜவுளி வியாபாரியான நான் மொத்த விலையில் ஜவுளி வாங்குவதற்காக எனது நண்பருடன் ரூ. 29 லட்சம் எடுத்துக் கொண்டு பெருந்துறை வந்தேன். ஜவுளி புரோக்கர் ஒருவருடன் ஜவுளி குடோனுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தாேம்.
பெருந்துறை, கடப்பமடை பகுதியில் ஏரி கருப்பராயன் கோயில் அருகே செல்லும்போது, போலீஸ் சீருடை அணிந்த 4 நபர்கள் காரை சோதனையிட வேண்டும் என்றனர். காரை சோதனையிட்ட போது ஜவுளி வாங்குவதற்காக வைத்திருந்த ரூ. 29 லட்சத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டனர். “நீங்கள் வைத்திருப்பது கறுப்புப்பணம் போல தெரிகிறது. அதனால் நீங்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இந்தப் பணத்துக்கு கணக்கு காட்டி விட்டு ஸ்டேஷனில் இருந்து உங்கள் பணத்தை திரும்பப் பெற்றுச் செல்லுங்கள்”, என்று கூறிவிட்டு பணத்துடன் அந்த நால்வரும் காரில் எஸ்கேப் ஆகி விட்டனர். எனவே என்னிடமிருந்து பெற்றுச் சென்ற பணம் ரூ. 29 லட்சத்தை திருப்பித் தர வேண்டும்” என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

விசாரணையில் பணத்தை எடுத்துச் சென்ற நபர்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த காவலர்கள் இல்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகே சீருடை அணிந்து போலீஸார் போல வந்த சிலர் தன்னை ஏமாற்றி பணம் பறித்து சென்றதை அன்சர் உணர்ந்தார்.
இதை அடுத்து அன்சர் கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு பெருந்துறை காவல் ஆய்வாளர் மசூதா பேகம் தலைமையிலான தனிப்படையும், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அடங்கிய தனிப்பிரிவு என 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அன்சர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்பவர் மூலமாக பெருந்துறையில் இருந்து கள்ளநோட்டுகளை வாங்க முற்பட்டதும், அதற்காக அஷ்ரப்பின் ஆட்களான கேரள மாநிலம், ஆலுவா, புரயம் பகுதியைச் சேர்ந்த பஷீர் (49), கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் (எ) சேகர் (47), பாலக்காடை சேர்ந்த ஜலீல் (42), பாலக்காடு, கண்ணாண்டியைச் சேர்ந்த சுதீர் (52), ஊட்டி, சேரிங்கிராஸைச் சேர்ந்த மகாலட்சுமி என்கிற பிரேமா (48) ஆகியோர் ரூ. 6 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் தயார் செய்து கொடுத்ததும் தெரிய வந்தது. ஒரிஜினல ரூபாய் நோட்டுகளான ரூ. 29 லட்சத்தை கொடுத்து கள்ளநோட்டுகளை பரிமாறிக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் போலீஸ் சீருடையில் அஷ்ரபின் ஆட்கள் 4 பேர் வந்தனர்.

போலீஸார் சீருடையில் வந்த அஷ்ரபின் ஆட்கள், அவர்கள் வைத்திருந்த ரூ. 6 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகளையும், ரூ. 29 லட்சம் ஒரிஜினல் நோட்டுகளையும் பறித்து கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். மோசடியில் சம்மந்தப்பட்ட பஷீர், ஜனார்த்தனன், சுதீர், ஜலீல், மகாலட்சுமி ஆகிய 5 பேரையும் தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.24,80,000 ரொக்கத்தையும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் போலீஸ் போல வேடமணிந்து ரூ.29 லட்சத்தையும், ரூ.6 கோடி மதிப்பில் கொண்டு வந்திருந்த கள்ளநோட்டுகளையும் பறித்துச் சென்ற 4 பேரையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸார் நம்மிடம் கூறுகையில்,
“கடந்த 14-ம் தேதி இரவு அன்சர், அஷ்ரஃப் ஆகியோர் காரில் சென்ற போது வழிமறித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிவகங்கை மாவட்டம், நாமலூரைச் சேர்ந்த வேல்முருகன் மகன் பத்மநாபன் (52), ஏற்கெனவே செய்யப்பட்ட பஷீரின் நெருங்கிய நண்பர் ஆவார்.பத்மநாபன் தற்போது ஈரோடு மாவட்டம், கோபி, கடத்தூரில் சுதா என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார். ரூ. 29 லட்சத்துக்கு ரூ. 6 கோடி மதிப்பில் கள்ளநோட்டு தருவதாகக் கூறி அஷ்ரப், அன்சரை அழைத்து வந்து பஷீரிடம் அறிமுகம் செய்து வைத்தார். பஷீர் ஒரு பெட்டியில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். அந்தப் கள்ள நோட்டுகளை அன்சருக்கு காட்டி விட்டு, ஒரிஜினலான ரூ. 29 லட்சம் ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது அங்கு பத்மநாபனும், அவரது கூட்டாளிகளான கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (62), திருச்சி, மணப்பாறை கோவிந்தன் (33), கரூர், சத்தியமங்கலம் தெற்கு மயிலாடியைச் சேர்ந்த பால்ராஜ் (55), திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த சகாய ஆரோக்கியதாஸ் (42) ஆகியோர் வந்தனர்.

இவர்களில் கார் டிரைவரான சகாய ஆரோக்கியதாஸ் காரிலேயே இருந்தார். மற்ற 4 பேரில் பால்ராஜும், கோவிந்தனும் போலீஸ் சீருடை அணிந்திருந்தனர். பத்மநாபன், தன்னை சிஐடி போலீஸ் என்றும் கூறியபடி ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளையும், கள்ளநோட்டுகள் அடங்கிய பெட்டியையும் எடு்த்துச் சென்றார்.
பிடிபட்ட 5 பேரிடமும் விசாரித்தபோது, பஷீர் கள்ளநோட்டு ரூபாய் கட்டுகளின் மேலேயும், கீழேயும் நல்லநோட்டுகளை வைத்தும், நடுவில் செய்தித்தாள்களை வெட்டி ரூபாய் நோட்டு கட்டுகளைப் போல ஜோடித்துள்ளார். இதை அன்சர் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவே பெட்டியை மாற்றும்போது பத்மநாபன் தலைமையில் போலீஸ் சீருடை அணிந்த நபர்களை அங்கு வரச் செய்து ரூபாய் நோட்டுகளை பறித்துச் செல்ல பஷீர் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த வழக்கில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களும் விரைவில் பிடிபடுவார்கள்” என்று போலீஸார் தெரிவித்தனர்.