புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழர்கள் அதிகம் வருகை தரும் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த புனித நகரத்துடன் தமிழர்களுக்கு உள்ள தொடர்பை நினைவுகூரும் வகையில் அங்கு ஒரு மாதத்துக்கு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த நவம்பர் 19-ல் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினார். பிறகு காசி விஸ்வநாதர் கோயில் உள்ளேயே அவருக்கு பக்தி இசை நிகழ்ச்சி நடத்த கடந்த 15-ம் தேதி வாய்ப்பு அளிக்கப்பட்டது. தென்னிந்திய மொழிகளில் முதல் பக்தி இசை நிகழ்ச்சியாகவும், கோயில் புதுப்பிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா தேவாரமும் திருவாசகமும் பாடினார். இந்நிலையில் இக்கோயிலில் தொடர்ந்து சிவபெருமான் முன்பு தேவாரமும் திருவாசகமும் பாடப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் சிவனுக்கான தமிழ் பக்திப் பாடல்களாக தேவாரமும் திருவாசகமும் உள்ளன. இவை வேறு எந்த மொழியிலும் இல்லாத பழமையான பக்தி இலக்கியம் ஆகும். காசி எனும் வாரணாசியின் கேதார் படித்துறையில் உள்ள கேதாரீஸ்வரர் கோயிலில் மட்டுமே இவை பாடப்படுகின்றன. இதற்காக, அக்கோயிலை கட்டிய தமிழரான குமரகுருபரரால், ஓதுவார்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
குமரகுருபரர் கட்டிய குமாரசாமி மடத்தினரால், இந்த கேதாரீஸ்வரர் கோயில் நிர்வகிக்கப்படுகிறது. எனினும், சிவனின் பழம்பெரும் பக்தி இலக்கியப் பாடல்களான இந்த தேவாரமும், திருவாசகமும் முக்கியமான, காசி விஸ்வநாதர் கோயிலில் பாடப்படுவதில்லை.
காசி விஸ்வநாதர் கோயிலில் அன்றாடம் நான்கு காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. இவை நான்கிலும் காசியின் பிராமண புரோகிதர்களால், சுக்லயஜுர் வேதம் பாடப்படுகிறது. மாலை ஏழு மணிக்கு நடைபெறும் சப்தரிஷி பூஜையில் கூடுதலாக சம்ஸ்கிருத ஸ்தோத்திரங்களை இவர்கள் சங்கீதமாகப் பாடுகின்றனர். இவற்றை புரிந்தும், புரியாமலும் தமிழர்கள் கேட்டு வழிபட்டுச் செல்லும் நிலை உள்ளது. ஆனால் இவை எதிலுமே தமிழ் மொழியிலான தேவாரமும், திருவாசகமும் சிவனின் முன்பாகப் பாடப்படுவதில்லை.
இத்தனைக்கும் அந்த நான்குகாலப் பூஜைகளில் மூன்று பூஜைகள், தமிழர்களின் மடமான நகரத்தார் சத்திரம் சார்பில் நடத்தப்படுகிறது. இதற்கான பூஜைப் பொருட்கள், வாரணாசியின் கதவுலியா பகுதியிலுள்ள நகரத்தார்சத்திரத்தில் இருந்து அனுப்பப்படுகின்றன. இதன் கடைசி காலப்பூஜையான சிருங்காரப் பூசைக்கான சம்போ ஊர்வலம் ‘சம்போ ஹரஹர மஹாதேவா..’ என ஆலாபத்துடன் ஒலித்தபடி கோயிலுக்கு தினமும் செல்லும். இதை வாரணாசி மக்களும் அங்கு வரும் சிவபக்தர்களும் இருபுறங்களிலும் நின்று பக்தியுடன் வழிபடுகிறார்கள்.
இந்த ஊர்வலத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அண்மையில் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வாரணாசி ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் கூறும்போது, “இளையராஜா பாடிய தேவாரமும் திருவாசகமும், காசி விஸ்வநாதர் கோயிலில் தொடர வேண்டும் என அங்கு வரும் தமிழர்கள் ஆதங்கப்படுவது அதிக ரித்து வருகிறது.
தமிழகத்தின் ஓதுவார்களை வைத்து நான்கு காலப் பூஜை களிலும் சிவனின் திருவடிகளில் திருவாசகம் அன்றாடம் பாடவேண்டும் என்ற வலியுறுத்தலும்துவங்கி உள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் பேசி அதற்கான முயற்சி செய்யப்படும்” என பதிலளித்தார்.