புதுடில்லி விமான பயணத்தின் போது சீக்கியர்கள், ‘கிர்பான்’ எனப்படும் குறுவாள் எடுத்துச் செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, புதுடில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சீக்கிய மதத்தில் சில நடைமுறைகள் உள்ளன. இதன்படி சீக்கிய ஆண்கள், ‘கிர்பான்’ எனப்படும் குறுவாளை தங்களுடன் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
ஆனால், உள்நாட்டு விமான பயணியருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச்சில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் சீக்கியர்கள், 9 அங்குல நீளமுள்ள கிர்பான்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து ஹர்ஷ் விபோர் சிங்லா என்பவர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். கிர்பான் எடுத்துச் செல்ல சீக்கியர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என, அவர் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சர்மா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:
விமான பயணங்களில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதேநேரத்தில் கிர்பான் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய, ஒரு குழு அமைக்க வேண்டும் என்று தான் கோரிக்கை விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கிர்பான் விவகாரம் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளில் அரசு தலையிட முடியாது.
விமானங்களில் பயணியரின் பாதுகாப்பு தொடர்பாக, உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை புறந்தள்ள முடியாது. எனவே, இந்த பொதுநல மனு தாக்கல் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்