CUET 2023: மத்திய பல்கலை நுழைவுத்தேர்வு தேதி வெளியீடு!

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களில் கல்வி பயில்வதற்கு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் பொது பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு (CUTE) அவசியம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்து உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்றில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை நிறைவு செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

கியூட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு பிளஸ் 2 மதிப்பெண்ணை தகுதியாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், மாணவர் சேர்க்கைக்கு இந்த மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்து உள்ளது.

அத்துடன் சிறுபான்மையினர் உள்பட அனைத்து மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வு மூலமாக சேர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்கான கேள்விகள் அனைத்தும் என்சிஇஆர்டி பாட திட்டங்களின் அடிப்படையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அந்தவகையில் மத்திய பல்கலைக்கழகங்களில் 2023ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத்தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்படி, இளங்கலை படிப்புகளுக்கான கியூட் 2023 தேர்வுகள் அடுத்த ஆண்டு மே 21 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும், விண்ணப்பதிவு வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கியூட் 2023 நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 3வது வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஜூன் முதல் மற்றும் 2வது வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு முடிவு ஜூலை மாதத்தில் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. எனவே தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.nta.ac.in/cuetexam என்கின்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ. 650, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.550 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த தேர்வு கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். கியூட் நுழைவுத் தேர்வை இந்தியாவில் 259 நகரங்களில் உள்ள 489 தேர்வு மையங்களில் எழுதலாம்.

மேலும் நாட்டிற்கு வெளியே 2 நகரங்களில் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் கணினி வழியில் தேர்வு நடக்கும். தேர்வு முடிவுகள் https://cuet.samarth.ac.in என்கின்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.