ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1: பாஸ் ஆனவர்கள் எத்தனை பேர்? தமிழக அரசு அறிவிப்பு!

அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விரும்பினால் அதற்குரிய தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2009ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இது தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். இதையடுத்து 2010 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களே ஆசிரியராக பணிபுரிய தகுதி பெற்றவர்கள்.

இடைநிலை ஆசிரியர் பணி

அதுவும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளில் பணியாற்ற முதல் தாளும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பணியாற்ற இரண்டாம் தாளும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். கடந்த 2010 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியராக பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அதிகப்படியான இளைஞர்கள் பணியில் சேர்ந்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

அதன்பிறகு அவ்வப்போது ஆசிரியர் தகுதி தேர்வு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பணி நியமனம் என்பது எட்டாக் கனியாக இருந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இதனை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

சென்னையில் போராட்டம்

அதேசமயம் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் மற்றொரு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அப்படி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் அளிக்கப்படும். சமீபத்தில் கூட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

தாள் ஒன்று முடிவுகள்

இந்த சூழலில் நடப்பாண்டு அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை டெட் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இதை ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் டிசம்பர் 7ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியானது. அதில் முதல் தாளில் 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியராக பணியாற்ற தகுதி பெற்றுள்ளனர். இவர்களின் விவரங்களை சரிபார்க்க அவகாசம் அளிக்கப்பட்டது.

தகுதி சான்றிதழ் வெளியீடு

இதையடுத்து தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் சான்றிதழ், தகுதி சான்றுகள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டெட் தாள் ஒன்று தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை நேற்று (டிசம்பர் 22) முதல் பலரும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். அடுத்தகட்டமாக பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு எப்போது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.