2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேசிய அளவில் தொடங்கியுள்ளது. இரண்டு முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அரியணையில் அமரும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டும் பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும், கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியிலும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி களமிறங்கியுள்ளார்.
அவர் பாஜகவின் வகுப்புவாத அரசியலை எதிர்த்து ’மக்கள் ஒற்றுமை யாத்திரை’யை கன்னியாகுமரியில் தொடங்கினார். காஷ்மீர் வரை நடைபெறும் இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரத்தை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலங்கானா மகாராஷ்டிரா வழியாக தற்போது ராஜஸ்தானில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவருக்குப் பல்வேறு கட்சித்தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுடெல்லியில் டிச.24-ம் தேதி நடைபெறும் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில் மதுரையில் இன்று மக்கள் நீதி மைய கட்சியினர் பாராளுமன்றம் அடங்கிய புகைப்படத்துடன் உள்ள போஸ்டரில், ” ஆழ்வார்பேட்டையே அரசியலின் பள்ளி, அடிக்கப் போறோம் 2024-ல் சொல்லி….அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி, இனி இவரே நேர்மை அரசியலில் பெரும் புள்ளி!!!..” என்கிற வாசகத்துடன் அடங்கிய போஸ்டர் மதுரையில் பல்வேறு பகுதியில் ஒட்டியுள்ளனர்.