'இந்திய ஒற்றுமை பயணத்தை கெடுக்க மத்திய அரசு கொரோனா நாடகம்' – ஜெய்ராம் ரமேஷ்

“ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை கெடுக்க, மத்திய பாஜக அரசு, கொரோனா வைரஸ் தொற்றை வைத்து நாடகம் ஆடி வருகிறது,” என, காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது, பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று இரவு, தலைநகர் டெல்லியை இந்த யாத்திரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லை எனில், தேச நலனை கருத்தில் கொண்டு யாத்திரையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணத்தை தடுக்க சாக்கு போக்கு சொல்லப்படுகிறது என விமர்சனம் செய்திருந்தார். ராகுல் காந்தியின் எழுச்சியை கண்டு மத்திய பாஜக அரசுக்கு பயம் என, காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.

இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தியுடன் கைகோர்த்த கனிமொழி

இந்நிலையில் இன்று, ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள பக்ஹல் என்ற கிராமத்தில், செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:

கடந்த இரண்டு நாட்களாக காங்கிரசின் ஒற்றுமை நடைப்பயணம் குறித்து அவதூறு பரப்புவதற்கும், நடைப்பயணத்தை கவிழ்க்கவும் மத்திய அரசு கொரோனா பரவல் என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. நடைப்பயணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோள்.

கொரோனா குறித்து பாதுகாப்பு வழிமுறைகள் கடிதத்தை அனைவருக்கும் அனுப்பாமல் காங்கிரசுக்கு மட்டும் அனுப்ப காரணம் என்ன? நாங்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை சரிவர கடைபிடித்தே ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறோம்.

நாங்கள் உங்களைப் போல் கொரோனாவுக்கு எதிரானப் போரில் 18 நாட்களில் வெல்வோம் (மகாபாரத போரைப் போல) என்று கூறவில்லை. ஒரு மனிதர், நம்மிடம் வீட்டின் பால்கனிக்கு சென்று தட்டுகளில் ஒலியினை ஏற்படுத்தச் சொன்னார். இவை தான் அவர்களால் கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கூறப்பட்ட யோசனைகள். பிரதமர் முகக் கவசம் அணிந்திருந்த நேரத்தைக் காட்டிலும் நான் நேற்று அதிக நேரம் முகக் கவசம் அணிந்திருந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.