புதுடெல்லி: இந்தியாவில் எஃகு உற்பத்தியை உயர்த்தவும், உற்பத்தியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என நாடாளுமன்றத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி வருமாறு: இந்தியாவில் எஃகு உற்பத்தியாளர்களின் தற்போதைய நிலை குறித்து ஒன்றிய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
எஃகு உற்பத்தியின் மூலப் பொருட்கள் விலை உயர்வால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் போட்டியிடுவது சிரமமாகியுள்ளது என்பது உண்மையா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு எஃகு உற்பத்தி எவ்வளவு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த விவரங்களை மாத வாரியாக பட்டியலிட்டு தெரியப்படுத்தவும். உள்நாட்டு எஃகு உற்பத்தியை உயர்த்தவும், உற்பத்தியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
இந்திய எஃகு சங்கம் விடுத்த கோரிக்கையின்படி எக்கு இறக்குமதியைக் குறைக்க உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்குட்பட்டு ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களையும் தெரியப்படுத்தவும் எனவும் கேள்வி எழுப்பினார்.