புதுடெல்லி: எம்பிக்கள் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கார் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை நேற்று கூடியதும் அவை தலைவர் ஜெக்தீப் தன்கர் மற்ற நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து பேசினார்.
மேலும் ‘‘குறிப்பிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. எனவே கொரோனா தொற்று குறித்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நமது நாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குவது நமது கடமையாகும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், முககவசம் அணிதல், சானிடைசர்களை பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பின்பற்ற வேண்டும். அவையில் எம்பிக்கள் அனைவரும் முககவசம் அணிந்து பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் கை கோர்த்து தேசத்தை முன்மாதிரியாக வழிநடத்த வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதேபோல் மக்களவையிலும் சபாநாயகர் ஓம்பிர்லா முககவசம் அணிந்து அவைக்கு வந்தார். உறுப்பினர்களிடம் பேசிய அவர், ‘‘கொரோனாவின் கடந்த கால சம்பவங்களை கருத்தில் கொண்டு எம்பிக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் பின்பற்ற வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் எம்பிக்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. இதன் எதிரொலியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பிக்கள் முககவசம் அணிந்து பங்கேற்றனர்.