ஆவடி அருகே அயப்பாக்கம் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக 140 அப்பாவி மக்களிடம் ஆசை வார்த்தை கூறி, ரூ.3.46 கோடி மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர். 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நிலையில் கோயம்புத்தூரில் வைத்து தற்போது அவரை கைது செய்துள்ளனர், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
ஆவடி அருகே பருத்திப்பட்டு, சாந்தா டவரைச் சேர்ந்தவர் ரவி (64). இவருக்கு ஆவடி அருகே அயப்பாக்கத்தில் வசிக்கும் சவரிராஜ் பிரிட்டோ (62) மற்றும் அவரது மனைவி புனிதா (55) ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரவியிடம் சவரிராஜ் மற்றும் புனிதா இருவரும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள அதிகாரியான மகாலிங்க சிவா என்பவர் வீடு ஒதுக்கீடு செய்யும் பணியில் இருப்பதாகவும், அவர் வீடு இல்லாதவருக்கு வீடு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர். ரவி போலவே இன்னும் பலரிடமும் இதை அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, தம்பதியிடம் ரவி உள்பட 21 பேர், சுமார் ரூ.5 லட்சம் வீதம் ரூ.1.05 கோடி பணத்தை கொடுத்துள்ளனர்.
இதேபோல இந்த தம்பதியினர் மதுரவாயல், வடபழனி, சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 119 பேர்களிடமும் வீடு வாங்கித் தருவதாக பணம் பெற்றுள்ளனர். இப்படி, இந்த தம்பதியினர் 140 பேர்களிடம் ரூ.3.46 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு போலியான வீட்டு மனை ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி உள்ளனர்.
இதன் பின்னர் தாங்கள் ஏமாற்றபட்டதை அறிந்த ரவி உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 2017ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தனர். இந்த வழக்கானது தற்போது ஆவடி மத்தியப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், போலி ஆவண தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பாலன் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சவரிராஜ் பிரிட்டோவை கோயம்புத்தூரில் வைத்து கைது செய்து ஆவடிக்கு அழைத்து வந்தனர். பின்னர், போலீஸார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
