பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல முட்செடிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. அவற்றை அகற்ற வாகனஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ ெதாலைவில் வத்தலக்குண்டு உள்ளது. கடந்த 2010ல் ரூ.333.18 கோடி மதிப்பில் திண்டுக்கல்-குமுளி வரை இருவழிச்சாலை மற்றும் புறநகர் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. தற்போது இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லிருந்து பித்தளைபட்டி, வக்கம்பட்டி, செம்பட்டி, சித்தையன்கோட்டை, சிங்காரக்கோட்டை, வத்தலக்குண்டு வரையிலான தேசியநெடுஞ்சாலையோரத்தில் பல இடங்களில் தடுப்பை தாண்டி சீமைகருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
பல்வேறு பகுதிகளில் முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு செடிகள் வளர்ந்து உள்ளன. முட்செடிகளுக்கு பயந்து டூவீலர்களில் செல்வோர், பாதையை விட்டு விலகி செல்லும்போது விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. டூவீலர்கள் நலன் கருதி, விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள முட்செடிகளை உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.