சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்த உறவினர்… 10 கிலோ உப்பைக் கொட்டி உடல் அழிப்பு!

பிகார் தலைநகர் பாட்னாவில் ஒரு கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாட்னாவின் ஜானிபூர் பகுதியில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். அந்த பெண் குறித்து நடந்த விசாரணையில், நேற்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி திடுக்கிட வைத்தன. 

அர்வால் பகுதியை சேர்ந்த அந்த சிறுமிக்கும், ஜெகனாபாத்தில் இருந்த அவரின் உறவினருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த உறவினர், சிறுமியை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனக்கூறி திருமணத்தை நிறுத்திவிட்டார். அந்த உறவினரின் இளைய சகோதரன் பெயர் விஜேந்தர் குமார். 

திருமணம் நின்றுபோனதை அடுத்து, அந்த சிறுமியுடன் விஜேந்தர் குமார் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் அடிக்கடி போனில் பேசிவந்தனர். விஜேந்தர் குமாருக்கும் அந்த சிறுமி உறவினர் என்றாலும், விஜேந்தரை விட இளையவராக இருந்துள்ளார். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் கடந்த நவம்பர் 25ஆம் தேதியில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.  அந்த வகையில், கடந்த நவம்பர் 16 அன்று, விஜேந்தர் சிறுமிக்கு போன் செய்து, அர்வால் பஜாரில் தன்னை வந்து சந்திக்க அழைத்துள்ளார். 

இதையடுத்து, சிறுமியும் அங்கு செல்ல அவரை ஜெகனாபாத்தில் உள்ள ஓட்டலுக்கு விஜேந்தர் அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த விஜேந்தர்,  அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட விஜேந்தர், சிறுமியை ஹோட்டலிலேயே கொன்றுவிட்டு, பாட்னாவின் ஜானிபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் நிறைந்த இடத்தில் அவரது உடலைப் புதைத்ததாக போலீஸிடம் கூறினார். உடலை அடக்கம் செய்வதற்கு முன், 10 கிலோ உப்பை சிறுமியின் உடல் மீது ஊற்றியதாக தெரிவித்துள்ளார். அதாவது, உப்பை கொட்டினால் அவரது உடல் விரைவாக அழுகும் என்றும், உடலை அடையாளம் காண்பது கடினம் என்றும் கூறியுல்ளார். 

உயிரிழந்த சிறுமி காணாமல் போனதையடுத்து, குடும்பத்தினர் அர்வால் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளியும், சிறுமியும் போனில் அடிக்கடி பேசுவது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

பின்னர், அர்வால் போலீஸார், ஜானிப்பூர் காவல் நிலையத்தின் உதவியுடன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அழுகிய நிலையில் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.