சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று – நாள்தோறும் 5,000 பேர் உயிரிழப்பதாக தகவல்

பெய்ஜிங்: சீனாவில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில வாரங்களாக சீனாவில் கரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினமும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்படுகிறது. எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பன குறித்த விவரங்களை சீன அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது. எனினும் அந்த நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சீனாவின் உண்மை நிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இதன்படி சீனாவின் பல்வேறு நகரங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான சடலங்கள் போர்வையால் சுற்றப்பட்டிருக்கின்றன. மயானங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

சீனாவின் தற்போதைய நிலவரம் குறித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஏர்பினிட்டி என்ற ஆய்வு நிறுவனம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 என்ற வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த ஒரு மாதத்தில் நாள்தோறும் 37 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மார்ச் மாதத்தில் நாள்தோறும் 42 லட்சம் பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும். அப்போது உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரிக்கும். சீனாவில் தற்போது பரவும் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் அடுத்தடுத்து 3 அலைகள் வரை ஏற்படக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் கூறியதாவது: சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தினசரி கரோனா தொற்று, உயிரிழப்பு குறித்த உண்மையான தகவல்களை சீன அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசு கரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். சீனாவுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.