'திமுகவின் பொங்கல் பரிசு ஒரு ஏமாற்று வேலை' – அண்ணாமலை அட்டாக்!

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

பொங்கல் பரிசு தொகுப்பு என்ற பெயரில் உருகிய வெல்லம், பல்லி இருந்த புளி, பருத்திக்கொட்டை கலந்த மிளகு என்ற பொங்கல் தொகுப்பை வழங்கி மாபெரும் சாதனை புரிந்தது திறனற்ற திமுக அரசு. இந்த ஆண்டு மக்களின் ஆரோக்கிய நலனை கருத்தில் கொண்டு, சென்ற வருடம் வழங்கப்பட்ட தரமற்ற பொங்கல் பரிசை இந்த ஆண்டு தவிர்த்தமைக்கு பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழகத்தில் உள்ள 2.16 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2356.67 கோடி செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்ற செய்தியை நேற்று தமிழக அரசு வெளியிட்டது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000, 1 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆட்சிக்கு வந்தால் கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கம்புக்கு ரூ.4000 ஆதார விலையாக வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, அந்த வாக்குறுதியை மறந்தது மட்டுமல்லாது அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது, தேசிய உழவர் தினமான இன்று, திமுக விவசாய மக்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. அரசு கொள்முதலை எதிர்நோக்கியிருந்த விவசாயிகளின் நிலையை பற்றி திமுகவுக்கு என்ன கவலை. சிவப்பு கம்பளம் விரித்து வயலில் நடந்த கூட்டத்திற்கு விவசாயிகளின் வலி என்ன தெரியும்?

ஒரு கிலோ அரிசி 21 ரூபாய்க்கும், ஒரு கிலோ சர்க்கரை 31 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யும் தமிழக அரசு, வழங்கப்படவிருக்கும் பொங்கல் தொகுப்பில் இந்த பொருட்களின் விலை ரூ.76 என்று கணக்கு காட்டியுள்ளதையும் இந்த அரசு பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன், பொங்கல் பரிசு ரூ.5000 வழங்க வேண்டும் எனறு போர்க்கொடி தூக்கிய அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வரும் இப்போது அந்த கோரிக்கையை மறந்து விட்டார்கள் போல. கொடுத்த வாக்குறுதிகளை மறந்த இவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மட்டும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது.

பனைவெல்லம் மற்றும் பனை பொருட்களை நியாய விலை கடைகளில் விநியோகம் செய்வோம் என்று அறிவிப்பை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு வருடமாக உறங்கி கொண்டிருக்கிறது திமுக அரசு. அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கோரிக்கை.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.