புதுடெல்லி: “வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.4 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பெற்று செலுத்தாதவர்களின் எண்ணிக்கை வெறும் 16 பேர் மட்டுமே. இவர்கள் அனைவருமே பாஜக ஆளும் மாநிலங்களில்தான் உள்ளனர்” என்று மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது: “நிதி அமைச்சகம் மூன்று முக்கிய விஷயங்களில் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. அதில், முதலாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மக்களே. கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கைக்குப் பிறகு அரசே ரூ.2,000 நோட்டை அச்சடித்து வெளியிட்டது.
இதற்காக தொழில்நுட்ப ரீதியில் ஏடிஎம்களில் மாறுதல் செய்ய வேண்டியிருந்தது. பிறகு படிப்படியாக ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இப்போது எந்த ஒரு வங்கி ஏடிஎம்-மிலும் ரூ.2,000 நோட்டு வருவதில்லையே? இரண்டாயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்திலிருந்து நீக்கிவிட்டு புதிதாக 500 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு அச்சிடப்பட்டன என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும்.
அடுத்ததாக, வங்கிகளின் வாராக் கடன் தொகையில் வாராக் கடனாக ரூ.2.4 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பெற்று செலுத்தாதவர்களின் எண்ணிக்கை வெறும் 16 பேர் மட்டுமே. இவர்கள் அனைவருமே பாஜக ஆளும் மாநிலங்களில்தான் உள்ளனர். அவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற அரசு எத்தகைய நடவடிக்கையை எடுத்தது?
மூன்றாவதாக, ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் மூலம் திறந்த வெளிக் கழிப்பிடத்தை ஒழிப்பதற்காக வீடுகளில் கழிப்பறை கட்டிக் கொள்ள ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. தற்போது அந்தத் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளபடியே இது சிறந்த திட்டம். ஆனால், ரூ.10 ஆயிரம் அல்லது ரூ.12 ஆயிரத்தில் இயங்கும் நிலையிலான ஒரு கழிப்பறையைக் கட்டவே முடியாது. இதுவரை 10.9 கோடி கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 55 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் செலவிடப்பட்ட தொகை ரூ. 66,000 கோடி.
இந்தியா முழுமைக்கும் செலவிடப்பட்ட தொகை ரூ. 1,30,800 கோடி. நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டம் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் வீணாகும் வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு நிதியை அதிகரிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.