தூத்துக்குடி: தமிழக பாஜக மாநில துணைத் தலைவராக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாஜக கட்சி சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டார். நேற்று மதியம் 1.30 மணியளவில் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவில் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. இந்த கும்பல் திடீரென சசிகலா புஷ்பா வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது.
வீட்டின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. வீட்டின் ஜன்னல், பூந்தொட்டி மற்றும் முன்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை மர்ம கும்பல் உடைத்து சூறையாடியது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். நேற்று அந்த பகுதியில் பராமரிப்பு பணிக்காக மின் தடை அமலில்இருந்ததால் சிசிடிவி காட்சிகள் பதிவாகாமல் இருக்கலாம் என்றும் கூறுப்படுகிறது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பேசிய சசிகலா புஷ்பா, அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக யாரேனும் சசிகலா வீடு மீது தாக்கினார்களா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என சிப்காட் போலீஸார் விசாரிக்கின்றனர்.