கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராகும் நிலையில் மஞ்சள் குலை செடிகள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளன்று அதிகாலையில் எழுந்து இல்லங்கள் முன்பு பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது தமிழ் பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. இவ்வாறு தைத்திருநாளன்று பொங்கலிட்டு வழிபடும்போது, குத்துவிளக்கேற்றி வைத்து, பொங்கலிடப்பட்ட பானைகள் அருகில் மஞ்சள் தாங்கிய குலைகளை தோரணமாக கட்டி வைப்பது வழக்கம். மஞ்சள் குலைகளை வைத்து வழிபடுவதன் மூலம் வீட்டில் மங்கலம் உண்டாகும் என பெரியோர்கள் கூறுகின்றனர்.
வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 15ம்தேதி தைப்பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு, நாலாட்டின்புதூர், முடுக்கு மீண்டான்பட்டி, இளையரசனேந்தல், கடலையூர், வில்லிசேரி, இடைசெவல், காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் தோட்டப்பாசனம் மூலம் மஞ்சள் கிழங்கு கன்றுகளை நட்டியுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான விவசாயிகள் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி மஞ்சள் குலைகளை சாகுபடி செய்கின்றனர். இதுகுறித்து மந்தித்தோப்பு விவசாயிகள் கூறுகையில் ‘‘ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு மஞ்சள் கிழங்கு பயிர் சாகுபடி செய்து வருகிறோம். மஞ்சள் கிழங்கு 6 மாத பயிர் சாகுபடியாகும்.
ஆவணி மாதம் மஞ்சள் கிழங்கு கன்றுகள் ஊன்றப்பட்டு, தைமாதத்தில் அறுவடை செய்வோம். தைப்பொங்கலுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாக மஞ்சள் கிழங்கு குலைகளை அறுவடை செய்து வெளியிடங்களுக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகையையொட்டி கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்த வியாபாரிகள் மஞ்சள் கிழங்கு குலைகள் வேண்டி அட்வான்ஸ் பணம் கொடுத்துள்ளனர். மஞ்சள் கிழங்கு குலைகள் நன்றாக வளர்ந்துள்ளது’’ என்றார்.