பொங்கல் பரிசில் கரும்பு இல்லையா? தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

தமிழக மக்கள் பெரிது ஆர்வமுடன் எதிர்பார்த பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

கடந்த முறை பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 வகையான பொருள்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் ரொக்கம் வழங்கப்படவில்லை. அதற்கு முந்தைய வருடங்களில் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது ரொக்கப் பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதுமட்டுமல்லாமல் கடந்த முறை சில இடங்களில் பொருள்கள் தரமற்றதாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழக அரசு 1000 ரூபாய் ரொக்கமும், ஒரு கிலோ அரிசி, ஒரு சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலை கடைகளில் கரும்பை இலவசமாக வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் பனிக்கரும்பு பயிரிட்டுள்ளனர். பொங்கல் தொகுப்பிற்காக கருப்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் அதிகப்பரப்பில் பயிரிட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள் அது குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கரும்பு வழங்குவது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டை போலவே கரும்பு கொள்முதல் செய்யப்பட வேண்டும். முழுநீள கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயிக்க வேண்டும். மேலும் அரசு நிர்ணயம் செய்த விலையைவிட குறைவான தொகைக்கு கொள்முதல் செய்தால் பெறும் நஷ்டம் ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.