வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “போரில் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம்” என்று உறுதிபட தெரிவித்தார்.
சோவியத் யூனியன் உடைந்தபோது 1991-ம் ஆண்டில் உக்ரைன் தனிநாடாக உதயமானது. ரஷ்யாவின் நட்பு நாடாக இருந்த உக்ரைன் கடந்த 2014-ம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின்பக்கம் சாய்ந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டுப் படையில் (நேட்டோ) இணைய உக்ரைன் முயற்சி செய்தது.
இதன்காரணமாக கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யராணுவம் தாக்குதலை தொடங்கியது. கடந்த 10 மாதங்களாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவி வழங்கி வருகின்றன.
இந்த சூழலில் உக்ரைன் அதிபர்ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்தார். ரஷ்ய ராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக நேட்டோவின் உளவு விமானத்தில் ஜெலன்ஸ்கி ரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்க அதிபர்ஜோ பைடனை அவர் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைனுக்கு ரூ.1.53 லட்சம் கோடி நிதியுதவி வழங்க பைடன் உறுதி அளித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று பேசியதாவது: ரஷ்யா சர்வாதிகாரமாக செயல்படுகிறது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களால் எங்கள் மண் ரத்தமாக மாறியிருக்கிறது. இந்தநேரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எங்களின் உற்றதோழனாக செயல்படுகின்றன. அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் கொடுக்கும் நிதியுதவி, தானம் அல்ல. இது ஜனநாயகம் மற்றும் பாதுகாப்புக்கான முதலீடு. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் வீழவில்லை. வீரத்துடன் எழுந்து போரிடுகிறது. தகுந்த பதிலடி கொடுக்கிறது. போரில் ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்.
எங்களுக்கு இன்னும் ஆயுதங்கள் தேவை. இந்த இக்கட்டான நேரத்தில் அமெரிக்காவும் உலகநாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.