சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர் ஒருவர் அமெரிக்க எல்லைச் சுவற்றில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.
‘ட்ரம்ப் சுவர்’ என்றும் குறிப்பிடப்படும் அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவற்றைக் கடக்க முயன்றபோது இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கீழே விழுந்து உயிரிழந்ததாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் புதன்கிழமையன்று நடந்துள்ளது.
அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்ட சில செய்தி அறிக்கைகள், அந்த நபர் குஜராத்தின் காந்திநகர் மாவட்டத்தின் கலோல் தாலுகாவைச் சேர்ந்த பிரிஜ்குமார் யாதவ் என அடையாளம் காணப்பட்டதாகக் கூறுகின்றன.
Reuters (Representative image)
மனைவி மற்றும் பிள்ளை என குடும்பத்துடன் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவற்றைத் தொடும் போது தவறி விழுந்து அவர் இறந்தார். அதே நேரத்தில் அவரது மனைவியும் மூன்று வயது மகனும் பலத்த காயங்களுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
அவர் குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகத்தின் கலோல் யூனிட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிவதாக சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்று குடும்ப உறுப்பினர்களும் கணிசமான உயரத்தில் இருந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாதவின் மனைவி சுவற்றின் அமெரிக்கப் பக்கம் விழுந்தாலும், அவர்களது மகன் மெக்சிகோ பக்கம் விழுந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலம் அறிந்ததும், குஜராத் மாநில குற்றப் புலனாய்வுத் துறை (CID) உண்மைகளைக் கண்டறியவும், சட்டவிரோதமாக மக்களைக் குடியேற்றுவதில் ஈடுபட்டுள்ள முகவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
காந்திநகர் காவல் கண்காணிப்பாளர் தருண் குமார் துக்கால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைக் கண்டறிய தனி விசாரணையைத் தொடங்கினார்.